உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க என்.ஆர்.காங்கிரஸ் திட்டம்? தடை உத்தரவு பெற தொடர் முயற்சி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆரம்பக்கட்ட பணிகளைக் கூட தொடங்கவில்லை. தேர்தலுக்கு தடை உத்தரவு கிடைக்காமல் போனால், தேர்தலைப் புறக்கணிக்க, அக்கட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 அதே நேரத்தில், தேர்தலுக்கான தடை உத்தரவு பெறுவதற்கான முயற்சிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
 புதுச்சேரி மாநிலத்தில் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஜனவரி 15ம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இதற்கிடையே, தேர்தலுக்குத் தடை கோரி, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில், வார்டுகள் மறுசீரமைப்பு நடத்தி பிறகு தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார் ஆனந்தலட்சுமி. ஆனால், தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிச.12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
 நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையொட்டி, கடந்த 3-ம் தேதி புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான 3 கட்ட வாக்குப் பதிவு தேதிகளை அறிவித்தது.
 இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
 திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பாமக எனப் பல்வேறு கட்சிகள் விருப்ப மனு பெறும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
 ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியோ இதுவரை எவ்வித ஆரம்பக்கட்ட பணிகளைக்கூட மேற்கொள்ளவில்லை.
 உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களோ, விருப்ப மனு பெறும் பணிகளோ தொடங்கப்படாமல் இருக்கிறது.
 ÷வரும் 14ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் நபர்கள் குறித்த விவரங்களோ, கூட்டணி குறித்தோ எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி பெரும்பாலான அரசியல் கட்சிகளிடமும், மக்களிடமும் எழுந்துள்ளது.
 ÷இதுதொடர்பாக முதல்வர் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது, வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளில் கூட, கட்சியினரை போட்டியிடுமாறு கட்டளையிட்டால், போட்டியிட அவர்கள் தயாராக உள்ளனர். எனவே ஏன் விருப்ப மனு பெற வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
 உங்களின் பதிலில், உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் என்ற நம்பிக்கை இருக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த என்.ரங்கசாமி, நம்பிக்கைதான் வாழ்க்கை. நீதிமன்றத்திலிருந்து இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லையே என்றார்.
 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில், தேர்தலுக்குத் தடை கிடைக்கும் என என்.ஆர்.காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
 அப்படி தடை கிடைக்காதபட்சத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
 ÷அங்கும் தேர்தலுக்குத் தடை கிடைக்காதபட்சத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 காரணம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மக்களைச் சந்திக்க என்.ஆர்.காங்கிரஸ் தயங்குவதாக தெரிகிறது.
 இதற்காக, அதிகாரமிழந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.270 கோடி நிதி அளித்தாலே தேர்தலை நடத்த முடியுமென்று கடந்த 26-ம் தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
 ஆனால், மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவ்வளவு எளிதில் நிதி கிடைக்காத அளவுக்கு நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் உள்ளன.
 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காதபோது, அதற்கு பொறுப்பேற்க முன்வராமல் இருப்பதற்கான வாய்ப்பாக, தேர்தலைப் புறக்கணிக்க என்.ஆர்.காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com